“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்”

உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிய...

திட்டத்தின் நோக்கம்

‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது.

குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.

அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.

பெண்களின் உழைப்புக்கான பொருளாதார மதிப்பு

சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு.

உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.

இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது.

வரலாற்றுப் பின்புலம்

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், தாய்வழிச் சமூக முறைதான் மனித குலத்தை முதலில் வழிநடத்தி வந்திருக்கிறது என்ற உண்மை தெரியவரும்.

உழவுக் கருவிகளைக் கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறியபோதுகூட, பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே அமைந்திருந்தது.

ஆனால், காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள்.

அவர்களுக்குக் கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தின் உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பூட்டிய இரும்புக் கூட்டின் கதவினைத் திறந்து, பெண் அடிமைத்தனத்தைத் தகர்த்து, அவர்களுக்கான சமூக, பொருளாதாரச் சுதந்திரத்தை மீட்க எத்தனையோ சமூகச் சீர்திருத்தவாதிகள் பணியாற்றியதன் விளைவாக, இன்று பள்ளி, கல்லூரிப் படிப்புகளில் மாணவிகள் அதிகம் பயின்று, பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.

அரசுப் பணியாளர் தேர்வுகளிலும் பெண்கள் அதிகம் தேர்ச்சி பெறுவது தமிழ்ச் சமூகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

இன்றளவும் பல குடும்பங்களில் குறிப்பாக பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை

உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் (Global Gender Gap Report -2023), தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில், இந்தியா 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

வாங்கும் திறன் அடிப்படையில், பெண்களின் உலகளாவிய சராசரி ஆண்டு வருமானம் சுமார் $11,000 என்றும், அதே வேளையில், ஆண்களின் சராசரி ஆண்டு வருமானம் $21,000 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, ஆண்களின் வருமானத்தை விட, பெண்கள் ஏறக்குறைய சரிபாதி அளவுக்குத்தான் வருமானம் ஈட்டுகிறார்கள். உலகளாவிய அளவில், ஆண்டு வருமானத்தில் பாலின அடிப்படையில் பெரிய அளவில் மாறுபாடு இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது.

குறைவாக மதிப்பிடப்படும் பெண்களின் உழைப்புக்கான பொருளாதார மதிப்பை அங்கீகரிக்கவும், விவசாயம், வீட்டு வேலை போன்ற குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கிடவும் இந்த மாபெரும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.

பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம்

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் 2022ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 23.97% ஆகும். தமிழ்நாட்டில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 28.5% ஆக உள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும்.

2022-23ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 12% சதவீதம் உயர்ந்துள்ளது.

பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், புதுமைப்பெண் போன்ற மாநில அரசின் முன் மாதிரித் திட்டங்கள் காரணமாக வேலைக்கு செல்வதற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெண்களுக்கான வாய்ப்புகள் பெருகி உள்ளன.

உலகளாவிய ஆய்வுகள்

பொது அடிப்படை வருமானம் (Universal Basic Income) என்ற பெயரில் உலகில் பல நாடுகளில் சோதனை முறையில், குறிப்பிட்ட சில பகுதிகளில், ஒரு சில பிரிவினரிடம் மட்டும் இத்தகைய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அப்படி பரிசோதனை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் மூலமாகவே, பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் மூலம், வறுமை பாதியாகக் குறைந்திட வாய்ப்பு உண்டு என்றும், கிடைக்கும் நிதியைப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவச் செலவு செய்வதற்கு முன்னுரிமை தருகிறார்கள் எனவும், சிறுசிறு தொழில்களைச் செய்ய முன் வருகிறார்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்துக்கும் மேலாக, பெண்கள் தன்னம்பிக்கை பெற்றுள்ளார்கள். பரிசோதனை முயற்சியாக உலகில் சில நாடுகளில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்திய திட்டத்திற்கே இவ்வளவு பயன்கள் கிடைக்கின்றன என்றால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்த மகத்தான முயற்சி, எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெரும் பொருளாதாரப் பலன்களை உருவாக்கும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகளிர் உரிமைத் தொகை குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27.03.2023 அன்று ஆற்றிய உரையில் பின்வருமாறு அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் விளங்கவுள்ள, இந்த மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி வரலாற்றுச் சிறப்புமிக்க கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.